சர்வதேசம்

ஒபாமா மீது அவதூறு: டுட்டேர்ட்டேயுடனான சந்திப்பு இரத்து

CHINA-G20-SUMMIT

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே மேற்கொண்ட அவதூறுக் கருத்துக் காரணமாக, ஜனாதிபதி டுட்டேர்ட்டேயுடன் மேற்கொள்ளவிருந்த சந்திப்பை, ஜனாதிபதி ஒபாமா, இரத்துச் செய்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக டுட்டேர்ட்டே, இவ்வாண்டு ஜூன் 30ஆம் திகதி பதவியேற்ற பின்னர், அவரை முதன்முதலாகச் சந்திப்பதற்கு, ஜனாதிபதி ஒபாமா திட்டமிட்டிருந்த நிலையிலேயே, இச்சந்திப்புக் கைவிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பு, லாவோஸ் தலைநகர் வியன்டியானில் இடம்பெறவிருந்தது.

ஆனால், லாவோஸூக்குப் புறப்படுவதற்கு முன்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி டுட்டேர்ட்டே, நாட்டில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருளுக்கெதிரான யுத்தம் தொடர்பாகத் தனக்கு அறிவுரை வழங்கக்கூடாது என, ஜனாதிபதி ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியாக டுட்டேர்ட்டே பதவியேற்று இரண்டே மாதங்களில், 2,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கான சர்வதேச அழுத்தங்களும் காணப்படும் நிலையிலேயே, ஜனாதிபதி ஒபாமாவைச் சந்திக்க முன்னர், அது தொடர்பான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த, ஜனாதிபதி டுட்டேர்ட்டே முயன்றார்.

“மரியாதையாக நீங்கள் இருக்க வேண்டும். கேள்விகளையும் அறிக்கைகளையும் சாதாரணமாக வீசக்கூடாது. விபசாரியின் மகனே, அந்த மன்றத்தில் வைத்து உங்களை நான் தகாத வார்த்தைகளால் திட்டுவேன்”  என அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘நீங்கள் அவ்வாறு செய்தீர்களானால், சேற்றில் புரளும் பன்றிகளைப் போல நாங்கள் புரண்டு கொண்டிருப்போம்” என, ஜனாதிபதி ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தகாத சொற்களையும் கோபத்தையும் பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையும் இலகுவில் வெளிப்படுத்தக்கூடியவராக அறியப்பட்ட ஜனாதிபதி டுட்டேர்ட்டே, கீழைத்தேய நாடுகளின் ட்ரம்ப் என அழைக்கப்படுகிறார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவதற்கு, டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தகுதி கிடையாது என்பதை அடிக்கடி தெரிவித்துவரும் ஜனாதிபதி ஒபாமா, இந்தக் கருத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி டுட்டேர்ட்டேயைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்டார்.

சீனாவில் இடம்பெறும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே, ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் அவதூறு பற்றிய தகவலை, ஜனாதிபதி ஒபாமா அறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இது, சரியான தருணமா என அறியுமாறு, தனது அதிகாரிகளுக்கு அவர் பணித்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே, சந்திப்பு இரத்துச் செய்யப்பட்ட தகவல் அறிவிக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top
}